200 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பிரசாந்த் மருத்துவமனையை அமைச்சர் திறந்து வைத்தார்


சென்னை, அக்.2021: வட சென்னையில் 200 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சென்னையின் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையான பிரசாந்த் மருத்துவமனையை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், திரு மா சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாதவரம் எம்.எல்.ஏ. திரு சுதர்சனம், வடகிழக்கு சென்னை மாவட்ட செயலாளரும், வட சென்னை எம்.பி.யுமான திரு கலாநிதி வீராசுவாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட சென்னை பகுதியில் உள்ள மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சுகாதாரம் மற்றும் மருத்துவ பரிசோதனை சேவைகளை வழங்க, பிரசாந்த் மருத்துவமனை 9 தளங்கள் கொண்ட 1 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியில் திறக்கப்பட்டுள்ளது.
குழந்தை பேரின்மை சிகிச்சைக்கான சென்னையின் சிறந்த மருத்துவமனையாக பிரசாந்த் மருத்துவமனை விளங்கி வருகிறது. இத்துடன் இந்த மருத்துவமனையில் இதயநோய், இரைப்பைகுடல், சிறுநீரகவியல், நரம்பியல் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவம் உள்ளிட்ட பிறமருத்துவ சேவைகளையும் வழங்கி வருகிறது. கல்லீரல் மாற்றுசிகிச்சையிலும் சிறப்பான மருத்துவ சேவையை வழங்கும் விதமாக, கல்லீரல் மாற்றுசிகிச்சை பிரிவையும் இங்கு துவங்க திட்டமிட்டுள்ளது.
திறப்பு விழா நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில், மாதவரத்தில் பிரசாந்த் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மருத்துவமனை அனைத்து மருத்துவ வசதிகளுடன் நவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. ரோபோடிக் உதவியுடன் இங்கு மேற்கொள்ளப்படும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை குறிப்பாக எனது கவனத்தை ஈர்த்த ஒன்றாகும். சென்னைக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களை அறிமுகப்படுத்தி வரும் சில மருத்துவமனைகளில் பிரசாந்த் மருத்துவமனையும் ஒன்று, இதன் காரணமாக சென்னை சிறந்த மருத்துவ சிகிச்சைக்கான குறிப்பிடத்தக்க மையமாக மாறிவருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரசாந்த் மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் கீதா ஹரிபிரியா கூறுகையில், “எங்கள் மருத்துவமனையின் புதிய கிளையை வடசென்னையில் திறப்பது எங்களின் பன்னோக்கு மருத்துவமனையின் சிறப்பான செயல்பாட்டிற்கு பெருமை சேர்க்கிறது. வாழ்க்கைக்கு தேவையான ஆரோக்கியமான உடல்நல சேவைகளை வழங்கும் எங்களின் இடைவிடாத முயற்சியில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்”. பிரசாந்த் மருத்துவமனை சென்னையில் உள்ள மக்களுக்கு சிறந்த சிகிச்சையும் சுகாதார பராமரிப்பையும் கொண்டு வரும் என்று நான்நம்புகிறேன் என்று கூறினார்.
இந்த புதிய மருத்துவமனையில் 50 அவசர சிகிச்சை படுக்கை வசதிகளும், 7 அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் அவசர விபத்து சிகிச்சைக்கான படுக்கை வசதிகளும் அதிநவீன பை-பிளேன் கேத் லேப் (Bi-plane Cath lab) உள்ளிட்ட பல உலகத்தர வசதிகளும் உள்ளன.
இம்மருத்துவமனையின் கூடுதல் சிறப்பு அம்சங்கள் வருமாறு:-
- சீ.டீ மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் (CT and MRI Scan) உடன் கூடிய உயர்நிலை கதிரியக்கவியல் பிரிவு
- பிறந்த குழந்தைகளுக்கான தீவிரசிகிச்சை பிரிவு– நிலை 4
- இரைப்பை குடல் அறிவியல்மையம்
பிரசாந்த் மருத்துவமனை குறித்து:
பிரசாந்த் மருத்துவமனை ஒரு சிறப்பு பன்நோக்கு மருத்துவமனையாகும், இது சிறந்த மருத்துவ நிபுணர்களால் அதி நவீன மற்றும் அர்ப்பணிப்புள்ள சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது. வேளச்சேரியில் உள்ள இந்த மருத்துவமனை, சென்னை மற்றும் சென்னை நகரைச் சுற்றியுள்ள சிறந்த மற்றும் மக்களால் நன்கு அறியப்படும் பன்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது. இம்மருத்துவமனை நோயாளிகளுக்கு சிறந்த சேவை அளிக்க நல்ல பயிற்சி பெற்ற திறமையான செவிலியர்களைக் கொண்டுள்ளது. நோயாளிகளுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதன்மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற மருத்துவமனையாக மாறுவதும் ,அவர்களிடம் நம்பிக்கையைப் பேணுவதையுமே தனது முக்கிய நோக்கமாக இம்மருத்துவமனை கொண்டுள்ளது.