மயிலாப்பூர் டாக்டர் ராஜன் பல் மருத்துவமனையில் துல்லியமான பல் சிகிச்சைக்கு அதிநவீன சிடி ஸ்கேன் வசதி அறிமுகம்.

சென்னை, நவ மயிலாப்பூர் இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல டாக்டர் ராஜனின் டென்டல் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட 2வது கோன் பீம் சிடி ஸ்கேன் மையம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

இராமகிருஷ்ண மடம் மற்றும் இராமகிருஷ்ண மிஷனின் தலைவர் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அதிநவீன
கேர்ஸ்டிரீம் சிஎஸ் 9600 கோன் பீம் சிடி ஸ்கேன் இயந்திரத்தை இயக்கி தொடக்கி வைத்து ஆசி வழங்கினார்.

பின்னர் ராஜன் பல் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் குணசீலன் ராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது, பல்மருத்துவத்துறையில் சிறப்பான, நேர்த்தியான மருத்துவச் சேவை வழங்கும் நோக்குடன் கேர்ஸ்டிரீம் சிஎஸ் 9600 கோன் பீம் சிடி ஸ்கேன் இயந்திரம் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பற்களை இழந்தவர்கள், பற்களை மொத்தமாக இழந்தவர்கள், அல்லது மேல் மற்றும் கீழ்தாடை ஆகிய இரண்டு தாடைகளிலும் பற்கள் அதிக இடைவெளியுடன் அமைந்தவர்கள் ஆகியோருக்கு செயற்கை பற்களை உட்பதிக்க தேவையான சிகிச்சை அளிக்க பேருதவி புரிகின்றது.
மேலும், இது முழு தாடை பற்களையும் சீர் செய்வதை எளிதாக்கும் வகையில் சீரற்ற பல்வளர்ச்சி (எக்டோடெர்மல் டிஸ்பிளேசியா) மற்றும் பற்களை உட்பதிக்கும் தேவை கொண்ட இதர மருத்துவ சிகிச்சைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. கூடுதலாக, இந்த அதிநவீன தொழில்நுட்பம் மேல்தாடையில் அதீத எலும்பு இழப்புகளை கொண்டுள்ள நோயாளிகளுக்கு பற்களை உட்பதிக்கும் சிக்கல் நிறைந்த செயல்முறைகளுக்கும் பேருதவியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

விழாவில், தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர் எஸ்.ஜிம்சன், துணைத் தலைவர் சத்யா மற்றும் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர்.

About Author