ஐ.இ.எஸ்.எஸ். XI – இந்திய பொறியியல் பொருட்களை கொள்முதல் செய்யும் கண்காட்சி தயார் 

6400a5b6-c480-4c60-97f2-deaa59dfbd86

பிப்ரவரி 2024: கோவை:

சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இஇபிசி இந்தியாவின் தலைவர் திரு. அருண் குமார் கரோடியா, “வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கோவை கொடீசியா அரங்கத்தில் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி -XI நடைபெற இருக்கிறது. இதில், பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறை, டிட்கோ, டாடா ஸ்டீல், ஜாக்குவார் அண்டு லேண்டு ரோவர், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன், ஓ.என்.டி.சி., ஜெர்மன் நாட்டு வேளாண் கருவிகள் உற்பத்தியில் பெருநிறுவனமான கிளாஸ், இந்தியா மின்சார இரு சக்கர வாகன நிறுவனம் – ஏதர், நாற்பது நாடுகளைச் சேர்ந்த 300 வெளிநாட்டு கொள்முதலாளர்கள், தோராயமாக 10 ஆயிரம் கண்காட்சி பார்வையாளர்கள், மேலும் 700க்கும் மேற்பட்ட தொழில் ரீதியான தனிநபர் சந்திப்புகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சியில், பொறியியல் துறையைச் சேர்ந்த சர்வதேச உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், தொழில்நுட்ப வழங்குநர்கள், அரசாங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்,” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் தொழிற்துறை மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் ஆணையரான திருமதி கிரேஸ் பச்சுவா பேசும்போது, “2017 முதல் ஆறாவது முறையாக இந்த ஐ.இ.எஸ்.எஸ். கண்காட்சியை நடத்துவதற்கு தமிழ்நாட்டுக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதற்குப் பேருவகை அடைகிறோம். ஐ.இ.எஸ்.எஸ். என்ற இந்தக் கண்காட்சி சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கானது. அது தான், தேசிய அளவிலான தொழிற்துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொறியியல் ஏற்றுமதியில் 35 – 40 சதவிகிதம் பங்களிப்பு செய்வதும் இது தான். இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்பு செய்வதில் இரண்டாம் இடத்தில் இருப்பதோடு, இந்தியாவிலேயே எண்ணற்ற தொழிற்சாலைகளைக் கொண்டிருப்பது தமிழ்நாடு. மேலும் இங்கேயுள்ள தொழில் வழித்தடங்கள் அனைத்தும் எல்லா மாவட்டங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. அதோடு, பொறியியல் துறை ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஏப்ரல் 2023 முதல் டிசம்பர் 2023 வரையான காலகட்டத்தில், தேசிய பொறியியல் ஏற்றுமதியில், தமிழ்நாடு 15.8 சதவீத பங்களிப்பு செய்கிறது,” என்றார்.

பெல்ஜியம் நாட்டின் வடபகுதியான ஃப்ளாண்டர்ஸ், ஐந்தாவது முறையாக மீண்டும் கவனம் பெறும் பகுதியாக உள்ளது. இம்முறை பெல்ஜியத்தில் இருந்து வரும் குழுவினர், இந்திய பொறியியல் துறையில் முதலீடு செய்யவும் கொள்முதல் செய்யவும் உள்ளனர் என்று, பெல்ஜியத்தின் ஃப்ளாண்டர்ஸ் பகுதியின் வர்த்தக ஆணையாளரான திரு. ஜெயந்த் நாடிகர் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள ஜெர்மானிய தூதரான மைக்கேலா குச்லெர், “ஏப்ரல் 2023 முதல் டிசம்பர் 2023 வரையான காலகட்டத்தில், ஐரோப்பாவிலேயே ஜெர்மனி தான், இந்திய பொறியியல் துறை ஏற்றுமதிகளுக்கான மிகப் பெரிய சந்தையாக விளங்கியது. உலக அளவிலும் இந்தியா தான் 4வது பெரிய ஏற்றுமதியாளராகத் திகழ்கிறது. இந்தியாவில் இருந்து 3044.4 மில்லியன் டாலர் பெறுமான பொறியியல் ஏற்றுமதிகள் நடைபெற்றுள்ளன,” என்றார்.

இந்த ஐ.இ.எஸ்.எஸ். என்ற இந்தக் கண்காட்சி, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள், தம்முடைய பொறியியல் தயாரிப்புகளை வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும், ஈடுபாட்டோடும், அவர்களுக்கு உதவும் எண்ணத்தோடுமே உருவாக்கப்பட்டது. ஐ.இ.எஸ்.எஸ். என்ற சந்தைப்படுத்தும் தளத்தை உருவாக்கியதன் வாயிலாக, இ.இ.பி.சி. இந்தியா, பொறியியல் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவர்கள் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியான் நாடுகள், நியூசிலாந்து, காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள், கொள்முதலாளர்கள், முகவர்கள், வினியோகஸ்தர்கள், மொத்த குத்தகையாளர்கள் ஆகிய முக்கியமானவர்களுடன் வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள உதவுகிறது.

ஐ.இ.எஸ்.எஸ்.யின் இந்தக் கண்காட்சியில், மொத்தம் 15.58 மில்லியன் டாலர் மதிப்புள்ள 24,165 வணிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும். 9 இருதரப்பு ஒப்பந்தங்கள் உள்பட மொத்தம் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 54,543 வணிக தொடர்புகள் ஏற்படும். தங்களுடைய பொருட்களை காட்சிக்கு வைக்கும் 3,000 இந்திய நிறுவனங்களும், 3,000 பேராளர்களும், 86,000 வர்த்தக பார்வையாளர்களும் வருவார்கள். மேலும் 750 பேச்சாளர்கள் பங்கேற்பதோடு, 14 நாடுகளைச் சேர்ந்தவர்களின் 35 சர்வதேச கொள்முதல் சந்திப்புகள் நடைபெறும். 26 இந்திய அமைப்புகள் நடத்தும் 20 விற்பனையாளர் மேம்பாட்டுச் சந்திப்புகள் நடைபெறும். நாடு, மாநிலம், தொழில் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அழகுற அமைக்கப்பட்ட அரங்குகள் இருக்கும். 150க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளின் மூலம், வர்த்தகத்தை உருவாக்குவதற்கான பேச்சுகள், கலந்துரையாடல்கள், யோசனைகள், ஆழ்ந்த கருத்துரைகள் நடைபெறும். 150க்கு மேற்பட்ட இந்திய பொறியியல் பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்படுவதோடு, மாநிலங்களோடு நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொடுப்பதும் இந்திய மண்ணில் நடைபெறும் இந்த மிகப் பிரம்மாண்ட பொறியியல் கண்காட்சியின்வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக அமையும்.

 இந்த ஐ.இ.எஸ்.எஸ். XI கண்காட்சியில், #ஸ்மார்ட்சஸ்டெய்னெபிள்இஞ்சினியரிங் (#SmartSustainableEngineering) என்பது தான் மையக் கருப்பொருள். இந்தக் கண்காட்சி தமிழ்நாட்டில் ஆறாவது முறையாகவும், கோயம்புத்தூரில் இரண்டாவது முறையாகவும் நடைபெறுகிறது. இது, இந்திய அரசின் வர்த்தகத் துறை அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், கனரக தொழில்கள் துறை, பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் ஆதரவோடு நடைபெறுகிறது. மேலும், மேற்கு வங்கம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய கவனம் பெறும் மாநிலங்களாக இருக்கும். பெல்ஜியத்தின் ஃப்ளாண்டர்ஸ் பகுதி, கவனம் பெறும் மண்டலமாக இருக்கும். டாடா ஸ்டீல் நிறுவனம் ஸ்டீல் போரம் பங்காளராகவும், எல் அண்டு டி சூஃபின் தொழில்களுக்கு இடையேயான மின்வணிக பங்காளராகவும் இருப்பார்கள். இதில் 300 மேற்பட்ட இந்திய கண்காட்சியாளர்களின் 149க்கு மேற்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுவதோடு, நாற்பது நாடுகளைச் சேர்ந்த 300 பேராளர்கள் பங்கேற்பார்கள். மேலும், நாடு, மாநில ரீதியான சந்திப்புகள், உற்பத்தி ஸ்டார்ட் அப்கள், தொழில்நுட்ப உரைகள், திறன்மிகு உற்பத்திக்கான பட்டறைகள், சர்வதேச கொள்முதல் சந்திப்புகள், ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் பிரச்னைதீர்க்கும் ஆலோசனைகள் ஆகியவையும் இடம்பெறும்.

இந்தியாவிலேயே பொறியியல் உற்பத்திக்கான மிக முக்கியமான மையமாக கோயம்புத்தூர் உருவாகியுள்ளது. ஜவுளிக்கான தலைநகரமான கோவை, ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ என்றும் அழைக்கப்படுகிறது. அதோடு, இதனை பம்ப் சிட்டி என்றும் அழைக்கலாம். இங்கே நமது நாட்டிலேயே அதிகபட்ச மோட்டார்கள் மற்றும் பம்ப்களை இந்நகரம் உற்பத்தி செய்கிறது. பாரம்பரியமாக தொழில் முயற்சிகளில் முன்னணியில் நிற்கும் இந்தப் பகுதியில், புதுமை படைத்தலும், பொறியியல் திறன்களும் கொட்டிக் கிடப்பதால், இந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சி அது பெரும்பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டின் இணக்கமான தொழில் கொள்கையினால், பெரும் பலன் அடைந்தது பொறியியல் துறை மற்றும் மின்னணுவியல் ஏற்றுமதிகள் தாம். இதனால், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வர்த்தகமும் முதலீடுகளும் பெருகியுள்ளன. அதில், கோவை, உற்பத்தித் துறையில் பெரும் பலன் அடைந்துள்ளது.

About Author