இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் 156 வது கிளை தொடக்கவிழா
மருத்துவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் மருத்துவமனைகளில் பல்வேறு நோயாளிகளுக்கு தினமும் மருத்துவச் சேவை அளித்து வரும் மருத்துவர்கள் அனைவரும் தவறாமல் கரோனா தீநுண்மி தொற்று தடுப்பூசி போட்டு தங்களை பாதுகாத்துக் கொள்வதுடன், மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் சங்க வடக்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் ஜி.மரகதமணி வலியுறுத்தினார்.
சென்னை முகப்பேரில் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் 156 வது கிளை தொடக்கவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தலைவராக டாக்டர் என்.மதுசங்கரும்,செயலாளராக டாக்டர் கே.கமலக்கண்ணனும்,பொருளாளராக டாக்டர் சி.செல்வகுமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று டாக்டர் மரகதமணி மேலும் பேசியது பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாக்க உறுதுணையாகத் திகழ்ந்து வரும் மருத்துவர்கள்,தங்களையும்,தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் சித்தா,ஹோமியோபதி,ஆயுர்வேதம் உள்ளிட்ட இதர மாற்று மருத்துவ முறைகளுக்கு எதிரானவர்கள் அல்ல.அலோபதி மருத்துவப்படிப்பை முறையாகப் பயின்ற ஆங்கில மருத்துவர்களுக்கு நிகராக சித்தா,ஹோமியோபதி,ஆயுர்வேத மருத்துவர்களும் 6 மாத கால பயிற்சி அனுபவத்துடன் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கும் மத்திய அரசின் பரிந்துரையை எதிர்க்கிறோம். வடஇந்தியாவில் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை என்ற காரணத்திற்காக கலப்பு மருத்துவத்தை அனுமதிப்பது ஒட்டுமொத்த மருத்துவச் சமூகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடும்.மாறாக,தமிழகத்தைப் போல் இந்தியாவெங்கும் அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்தியஅரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர். இதய அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஹரிகிருஷ்ண பார்த்தசாரதி பேசுகையில், மேற்கத்திய நாடுகளில் சராசரியாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரும் மாரடைப்பு நோய், தற்போது இங்கு சராசரியாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கத் தொடங்கி உள்ளது கவலைக்குரியது . நடுத்தர வயதில் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய்,உடல் பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக ஆண்டுதோறும் அதிகரித்து வருவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்றார்.