பெருந்தொற்று காலத்தின்போது முதிர்வடைந்த கண்புரை மற்றும் உலர்ந்த கண்கள் பாதிப்பு நேர்வுகளின் எண்ணிக்கை ஐந்து – மடங்கு அதிகரிப்பு
சென்னை, 19 பிப்ரவரி 2021: முதிர்ச்சியடைந்த கண்புரை நோய், கண் தொற்றுகள், தீவிர உலர் கண்கள் பிரச்சனை (டிஜிட்டல் பயன்பாட்டின் காரணமாக கண் அழுத்தம்) மற்றும் கருவிழி ஒட்டு நிராகரிப்பு ஆகியவற்றால் அவதியுறுகின்ற நோயாளிகளின் அதிகரித்த எண்ணிக்கையோடு மக்களில் பெரும்பாலான கண் பாதிப்பு நிலைகளின் தீவிரத்தை கோவிட்-19 பெருந்தொற்று கணிசமாக மோசமாக்கியிருக்கிறது என்கின்றனர் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள். தாமதிக்கப்பட்ட சிகிச்சை அல்லது வீட்டிலிருந்து பணியாற்றுவதன் காரணமாக பணி – வாழ்க்கை சமநிலை இழப்பு ஆகியவற்றினால் ஏற்படுகின்ற முதிர்ச்சியடைந்த கண்புரை நோய்கள் மற்றும் உலர்ந்த கண்கள் பாதிப்பு நேர்வுகளில் இதன் மோசமான தாக்கம் காணப்பட்டிருக்கிறது.
டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் புரொஃபசர் அமர் அகர்வால், பெருந்தொற்றுக்கு முந்தைய சூழலை ஒப்பிட்டு, புள்ளியல் விவரங்களை வழங்கி கூறியதாவது: “2019 ஆண்டின் கடைசி காலாண்டில் எமது மருத்துவமனைக்கு வருகை தந்த அனைத்து கண் புரை நோயாளிகளில் 10%-க்கும் குறைவானவர்கள், முதிர்ச்சியடைந்த கண்புரை நிலையால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2020 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்த அளவானது, ஐந்து-மடங்கு உயர்ந்து 50% ஆக அதிகரித்திருக்கிறது. அதைப்போலவே, டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் கண் அழுத்தத்தினால் உருவாகின்ற உலர்ந்த கண்கள் நோய்களின் எண்ணிக்கையும் அதே காலஅளவில் 10% – லிருந்து, 30-50% என உயர்ந்திருக்கிறது. உரிய காலஅளவுகளில் பரிசோதனைக்கு வர பல நோயாளிகள் தயங்கியதன் காரணமாக, பல நோயாளிகளிடம் ஏற்கனவே இருந்த கண்விழி விறைப்பு மோசமாகியிருப்பதையும் நாங்கள் கவனித்திருக்கிறோம். முன்னதாக கருவிழி ஒட்டு சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளிடம் கருவிழி ஒட்டு நிராகரிப்பு மற்றும் கண்ணில் உயர்அழுத்தம் போன்ற சிக்கல்களும் காணப்பட்டன. இப்பெருந்தொற்று காலத்தின்போது, நீரிழிவு நிலையுள்ள பலர் உரிய காலஅளவுகளில் கண் பரிசோதனைகளை செய்யாமல் அலட்சியப்படுத்தியதால், அவர்களது விழித்திரையில் கடுமையான சிக்கல்கள் உருவாகின.”
சிகிச்சையைப் பெறுவதில் தாமதத்தின் காரணமாக, அதிகரித்த நோய் பாதிப்பினால் அவதியுறுகின்ற கண் நோயாளிகளின் சில எடுத்துக்காட்டுகளை புரொஃபசர் அமர் அகர்வால் குறிப்பிட்டு முன்னிலைப்படுத்தினார். தனது கண்புரை பாதிப்பிற்கான அறுவைசிகிச்சையை தாமதம் செய்த ஒரு முதிர்ந்த நபர், உயர் கண்அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதோடு, பார்வைத்திறனையும் பகுதியளவு இழக்க நேர்ந்தது. ஒரு வயதான பெண்மணியின் மோசமான ஒட்டுமொத்த உடல்நிலையானது, இருபக்க கருவிழிகளில் தொற்றுக்கும் மற்றும் அதைத்தொடர்ந்து இரு கண்களிலும் பார்வைத்திறன் இழப்பிற்கும் வழிவகுத்தது. ஒரே ஒரு கண்ணில் மட்டும் பார்வைத்திறன் உள்ள ஒரு நோயாளி, முன்னதாக கருவிழி மாற்றுப்பதிய சிகிச்சையை செய்து வந்தார். அவருக்கு கண் தொற்று ஏற்பட்டது மற்றும் பொதுமுடக்கத்தின் காரணமாக ஒரு கண் மருத்துவரிடம் சென்று அவரால் சிகிச்சைப்பெற இயலவில்லை. இப்போது இரு கண்களிலும் பார்வைத்திறனை இழந்திருக்கும் அவர், மறுபடியும் செய்யப்பட வேண்டிய கருவிழி மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கிறார். கருவிழி மாற்று சிகிச்சையை ஏற்கனவே செய்திருந்த ஒரு இளம் பெண்ணுக்கு கருவிழி ஒட்டு நிராகரிப்பு மற்றும் ஒட்டுதல் செயல்பாடு தோல்வியடைந்தது ஆகியவை உரிய நேரத்தில் கண்சிகிச்சையைப் பெறாத காரணத்தால் ஏற்பட்டதையும் நாங்கள் கண்டிருக்கிறோம்.
டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறைத்தலைவர் டாக்டர். எஸ். சௌந்தரி கூறியதாவது: “கடந்த சில மாதங்களின்போது டிஜிட்டல் பயன்பாட்டின் காரணமாக ஏற்படும் கண் அழுத்தம் மற்றும் உலர்கண்கள் பாதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருப்பதையும் நாங்கள் கவனித்து வருகிறோம். டிஜிட்டல் சாதனங்களை அளவுக்கு மீறி பயன்படுத்துவது மற்றும் பணி – தனிப்பட்ட வாழ்க்கை சமநிலை இழப்பு ஆகியவற்றின் காரணமாகவே இத்தகைய பாதிப்புகள் உருவாகின்றன. பொதுமுடக்கத்தின் ஆரம்ப காலகட்டங்களில், கண் வெண்படல அழற்சியோடு சில நோயாளிகள் மற்றும் கருவிழி நாள அடைப்புகளுடன் வேறுசில நோயாளிகளையும் நாங்கள் பார்க்க நேர்ந்தது. அதற்குப் பிறகு அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.”
அவர் மேலும் பேசுகையில்: “மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றால், தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று நோயாளிகள் கவலை கொண்டிருந்தனர். இதன் ஒரு விளைவாக, நோயாளிகளுக்கான சிகிச்சை மிகப்பெரிய அளவில் பாதிப்பிற்கு ஆளானது. ஏற்கனவே கண் பிரச்சனை உள்ள பல நபர்கள் உரிய காலஅளவுகளில் சோதனைகளை செய்து கொள்ளாததால், ஏற்கனவே இருந்த அவர்களது கண் பிரச்சனைகள் தீவிரமடைவதற்கு வழிவகுத்தது. புதிதாக கண் பிரச்சனைகள் ஏற்பட்ட பிறர், மருத்துவர்களை சந்தித்து, சிகிச்சை பெற காத்திருந்ததால், பார்வைத்திறன் இழப்பு உட்பட, கடுமையான பாதிப்புகளுக்கு அது வழிவகுத்தது. தொலைபேசி வழியாக ஆலோசனைப் பெற்ற நோயாளிகள் கூட நேரில் வராமல், தொலைதூரத்திலிருந்தே அனைத்து தீர்வுகளையும் பெற விரும்பினர். அவசியம் என்று கருதப்பட்டபோது கூட, நேரடியாக கண் பரிசோதனை மற்றும் பிற சோதனைகளை செய்துகொள்ள மருத்துவமனைக்கு வர வலுவான விருப்பமின்மை அவர்களிடம் காணப்பட்டது,” என்று கூறினார்.