2022-ஆம் ஆண்டிற்கான உலக திறன்கள் போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி இந்தியா ஸ்கில்ஸ் 2023-24 போட்டியைத் துவங்கி வைத்தார்

புதுடெல்லி, அக்டோபர் 2023: 2022-ஆம் ஆண்டுக்கான உலக திறன்கள் போட்டியின் சிறப்புப் பதிப்பில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த 18 போட்டியாளர்களை, மாண்புமிகு. கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறையின் அமைச்சர், திரு தர்மேந்திர பிரதான் அவர்கள் பாராட்டியுள்ளார். இந்த போட்டிகளில் 2 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்கள், மற்றும் 13 சிறப்பு பதக்கங்களுடன் இந்தியா 11-வது இடத்தைப் பிடித்துள்ளது. விமர்சையான நடைபெற்ற பாராட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கும், அவர்களுக்குப் பயிற்சியளித்த நிபுணர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தைப் பயன்படுத்தி – அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும், நாட்டின் மிக முக்கியமான தேசிய திறன்கள் போட்டியான ‘இந்தியா ஸ்கில்ஸ் 2023-24’ துவங்கப்படுவதை மாண்புமிகு அமைச்சர், திரு. பிரதான் அவர்கள் அறிவித்தார். இதில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஸ்கில் இந்தியா டிஜிட்டல் தளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் (MSDE) செயலாளர் திரு. அதுல் குமார் திவாரி; UGC-யின் சேர்மன், பேராசிரியர் M.ஜெகதீஷ் குமார்; திறன் மேம்பாடு & தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர், திரு. கிருஷ்ண குமார் திவேதி; AICTE-யின் சேர்மன், பேராசிரியர் T.G.சீதாராம்; டைரக்டர் ஜெனரல் (பயிற்சி) செல்வி. திரிஷால்ஜித் சேத்தி; மற்றும் NSDC-யின் தலைமை செயல் அலுவலரும், NSDC இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநருமான திரு. வேத் மணி திவாரி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக மே மாதத்தில் நடக்கவிருந்து, ரத்து செய்யப்பட்ட ‘வேர்ல்டு ஸ்கில்ஸ் ஷாங்காய் 2022’ போட்டிக்கான அதிகாரப்பூர்வ மாற்றாக இந்த ‘உலக திறன்கள் போட்டி 2022-இன் சிறப்பு நிகழ்வு’ நடத்தப்பட்டது. அதன் அசல் பாணியிலிருந்து சற்று மாறுபட்டிருந்த இந்த திறன் போட்டிகள் – 15 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கடந்த 7 செப்டம்பர் 2022 முதல் 26 நவம்பர் 2022 வரை, 12 வாரங்களுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.8 லட்சமும், நிபுணர்களுக்கு ரூ.3 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. வெண்கலப் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக ரூ.6 லட்சமும், நிபுணர்களுக்கு பரிசாக ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது. மெடாலியன் ஆஃப் எக்ஸலன்ஸ் சிறப்புப் பதக்கங்களைப் பெற்ற மாணவர்கள் மற்றும் வல்லுநர்களுக்கு முறையே ரூ.2 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு கல்வி மற்றும் திறன் மேம்பாடு, & தொழில்முனைவோர் துறை அமைச்சர், திரு. தர்மேந்திர பிரதான், அவர்கள், “மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் – இந்த 21-ஆம் நூற்றாண்டில் முன்னோடியாக இருந்து வழிநடத்துவதற்கு நமக்குத் தேவையான – திறன்கள், நடைமுறைப் பயன்பாட்டு அறிவாற்றல், மற்றும் நேரடி களப் பயிற்சி போன்றவற்றிற்கு நாங்கள் சம அளவில் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். திறன் போட்டிகள் என்பன நமது நாட்டின் திறன் மேம்பாட்டு கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது; நமது தேசத்தைக் நிர்மாணிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை சந்தையில் அவர்கள் ஏற்கப்படும் வாய்ப்பையும் இது மேம்படுத்துகிறது. ‘தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020’-இன் மூலம் திறன் மேம்பாட்டை கல்வியுடன் ஒருங்கிணைப்பதை நாங்கள் முறைப்படுத்தினோம்; 2023-24-ஆம் ஆண்டுக்கான உலக திறன்கள் போட்டியில், இந்தியாவின் பங்கேற்கும் பிரிவுகளை MSDE விரிவுபடுத்தும் என்றும், இந்தியா முதல் 10 இடங்களுக்குள் நுழையும் என்றும் நான் நம்புகிறேன். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டுமென்கிற நமது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க – தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு, இந்த திறன் மேம்பாட்டை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டுமென்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்று கோரினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, உத்வேகம் தரும் தங்களது வாழ்க்கைத் தருணங்களைப் பகிர்ந்து கொண்ட வெற்றியாளர்கள் – கொடிய பெருந்தொற்று உட்பட அனைத்து இடர்களையும் எதிர்த்து அவர்கள் எப்படிப் போராடினார்கள், வெளிநாடுகளுக்குச் சென்று அவரவர்களின் குறிப்பிட்ட திறன் பிரிவில் உலகின் சிறந்த போட்டியாளர்களுடன் போட்டியிட்டதையும்; அதில் அசைக்க முடியாத உறுதி மற்றும் முடிவில்லா ஆர்வத்தை வெளிப்படுத்தியதை பற்றியும் சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்துகொண்டனர். அவர்களின் ஆற்றலும், உற்சாகமும் நமக்கு ஒரு உத்வேகத்தை அளிப்பதாக மட்டுமில்லாமல் – மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டியிட மற்றவர்களையும் ஊக்குவிக்கும் ஒரு உந்து சக்தியாகவும் இருந்தது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக 2020-ஆம் ஆண்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்ட 46-வது உலக திறன்கள் (வேர்ல்டு ஸ்கில்ஸ்) போட்டியானது ஆரம்பத்தில் 2021-ஆம் ஆண்டில் நடத்தப்படுவதாகவே திட்டமிடப்பட்டிருந்தது. 84 நாட்களுக்கு 29 தனித்தனி நிகழ்வுகளாக நடத்தப்பட்ட போட்டியின் இந்த சிறப்பு பதிப்பானது 4,00,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை வரவேற்றது. 56 உறுப்பு நாடுகள், மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த சுமார் 1,000 போட்டியாளர்கள் 62 திறன் போட்டிகளில் பங்கேற்றனர்.

இந்தியா சார்பாக 56 போட்டியாளர்கள் மற்றும் 50 நிபுணர்கள் – 50 திறன் பிரிவுகளில் பங்கேற்றனர்; மேலும், வழக்கமாக ஆண்களே அதிகமாக பங்கேற்கும் வெல்டிங், பிளம்பிங் மற்றும் ஹீட்டிங், CNC மில்லிங், CNC டர்னிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிரிக் லேயிங் போன்ற திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகளில் 19% பெண்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ‘நாட்டின் வளர்ச்சிக்கு மகளிரின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும்’ என்ற மாண்புமிகு. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனையுடன் இது ஒத்துப்போவதாக இருந்தது.

இண்டஸ்ட்ரி 4.0, ரோபோ சிஸ்டம் ஒருங்கிணைப்பு, அடிட்டிவ் உற்பத்தி நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, மொபைல் செயலிகளை உருவாக்குவது, டிஜிட்டல் கன்ஸ்ட்ரக்ஷன் ஆகிய பிரிவுகளின் கீழ் பட்டியலிடப்பட்ட ஆறு புதிய எதிர்கால திறன்களுக்கான போட்டிகளிலும் இந்திய அணி பங்கேற்றது.

இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ளும் விதமாக, 2011-ஆம் ஆண்டுக்கான உலக திறன்கள் போட்டியில் 39-வது இடத்திலிருந்த இந்தியா, 2022 ஆம் ஆண்டில் 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது; இது – இளைஞர்கள் தங்கள் பணிசார் வாழ்க்கையின் எல்லைகளை விரிவுபடுத்துவதையும், தற்போதைய பணியிட சந்தையில் அவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும், பல்வேறு திறன்களுடன் தொழிலாளர்களை தயார்படுத்துவதற்காக பல விதமான தொழில் பயிற்சியின் தேவை வளர்ந்து வருவதையும் பிரதிபலிக்கிறது. வெல்டிங், பிளம்பிங் & ஹீட்டிங், CNC மில்லிங், CNC டர்னிங், எலக்ட்ரானிக்ஸ், பிரிக் லேயிங், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், இண்டஸ்ட்ரி 4.0, மெக்கட்ரானிக்ஸ் மற்றும் ரோபோ சிஸ்டம் ஒருங்கிணைப்பு போன்ற வழக்கமாக ஆண்களால் மேற்கொள்ளப்படும் திறன் பிரிவுகளுக்கான போட்டிகளில் – பாலின பாகுபாட்டின் தடையைத் தகர்த்து கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

மேலும், 2023-24-ஆம் ஆண்டிற்கான இந்திய திறன்கள் போட்டி தொடங்கப்படுவதன் மூலம் – அந்தந்த திறன் பிரிவுகளில் உலகளாவிய தரத்தை ஊக்குவிப்பது, சரியான போட்டித் திறனை வெளிப்படுத்துவது, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது என இளம் இந்தியர்களின் விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், பசுமைப் பணிகள், மற்றும் உற்பத்தி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட துறைகளில் இந்த போட்டி நடைபெறவுள்ளது; ஆட்டோபாடி பழுது நீக்கம், CNC மில்லிங், அடிட்டிவ் உற்பத்தி, ரோபோ சிஸ்டம் ஒருங்கிணைப்பு, நீர் தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பன போன்ற வர்த்தகங்களிலும் போட்டியாளர்கள் மோதவுள்ளனர்.

வளர்ந்து வரும் தொழில்துறை வல்லுநர்களின் பணிசார் வாழ்க்கையை முன்னேற்றுவதில், வேர்ல்டு ஸ்கில்ஸ் அல்லது இந்தியாஸ்கில்ஸ் போன்ற திறன் சாம்பியன்ஷிப் போட்டிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. திறன் பற்றாக்குறையால் ஏற்படும் இடைவெளியை நிரப்புவதற்கும், தொடர்ந்து வளர்ந்து வரும் வேலைவாய்ப்பு சந்தைக்கு நமது இளைஞர்களை தயார்படுத்துவதற்கும் உதவும் இது போன்ற போட்டிகள் – அரசாங்கங்கள், தொழில்துறை மற்றும் கல்வியாளர்களிடையே எளிதாக ஒரு ஒத்துழைப்பையும் ஏற்படுத்துகின்றன. இந்திய இளைஞர்கள் உலகத் தரத்தில் திறன்களைப் பெறவும், அதில் நிபுணத்துவம் பெறவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் இத்தகைய முன்முயற்சிகள் பெரிதளவில் உதவக்கூடும்.

About Author