தேசிய அறிவியல் தினம் 2026 – விக்சித் பாரத் கனவை வலியுறுத்திய எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்; டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆராய்ச்சி விருது மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
காட்டாங்குளத்தூர், பிப்ரவரி 28, 2026:
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், தேசிய அறிவியல் தினத்தை 28 பிப்ரவரி 2026 அன்று சிறப்பாகக் கொண்டாடியது. இந்நிகழ்வில் நிர்வாகம், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான “Women in Science: Catalysing Viksit Bharat” என்ற தலைப்பை முன்னிறுத்தி நடத்தினர். வளர்ந்து வரும் நாடான இந்தியாவில், பெண்கள் அறிவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களாக ஆற்றும் முக்கிய பங்கை இது வலியுறுத்தியது.
மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தில் பணியாற்றும் விஞ்ஞானி-ஈ டாக்டர் அகிலேஷ் குமார் மிஸ்ரா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிலையான தேசிய முன்னேற்றத்தை அடைய அறிவியல் புதுமை, பல்துறை ஆராய்ச்சி மற்றும் அனைவரும் இணைந்து செயல்படுதல் அவசியம் என அவர் வலியுறுத்தினார். மேலும், இந்தியாவின் ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்த பெண்கள் விஞ்ஞானிகள் ஆற்றும் பங்களிப்பு முக்கியமானது என்றும், அவர்கள் அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கின்றனர் என்றும் கூறினார்.
இந்நிகழ்விற்கு டாக்டர் நிதின் எம். நாகர்கர், இணைத் துணை வேந்தர் (மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் பிரிவு), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், தலைமை தாங்கினார். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியை வலுப்படுத்தவும், இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கவும் தொடர்ந்து செயல்படுவோம் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, 2026 ஆம் ஆண்டுக்கான “டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆராய்ச்சி விருது” சிறந்த ஆராய்ச்சி பங்களிப்புகளைச் செய்த ஆராய்ச்சி அறிஞர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கிய 360-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ‘சான்சிலர் அவார்ட்’ வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆராய்ச்சி செயல்பாடுகள், பல துறைகளில் பரவலாகவும், ஆழமான முறையிலும், செயல்பாட்டுடன் நடைபெறுகின்றன என்பதை தெளிவாக காட்டுகிறது.
தேசிய அறிவியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 அன்று ‘ராமன் விளைவு’ கண்டுபிடிப்பை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. அறிவியலின் முக்கியத்துவத்தை மக்களிடையே பரப்புவதே இதன் நோக்கம். இந்நிகழ்வின் மூலம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் புதுமை சார்ந்த கல்வி, அறிவியல் முன்னேற்றம் மற்றும் தேச நிர்மாணத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
