ரேலா மருத்துவமனை மற்றும் சென்னை சைக்கிளிஸ்ட்ஸ் இணைந்து நடத்திய உறுப்பு தான விழிப்புணர்வுக்கான சைக்ளோத்தான் நிகழ்வில் 500 நபர்கள் பங்கேற்பு

சென்னை / 20 ஆகஸ்ட் 2023: சென்னையின் பிரபல மருத்துவமனையான ரேலா மருத்துவமனையும் மற்றும் WCCG சென்னை சைக்கிளிஸ்ட்ஸ் என்ற சென்னை மாநகரைச் சேர்ந்த சைக்கிளிங் குழுவும் ஒருங்கிணைந்து ரேலா டெனாசிட்டி 110K சைக்ளோத்தான் என்ற நிகழ்வை இன்று நடத்தின. உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதும், உறுப்பு தானம் அளித்த குடும்பங்களை நன்றி உணர்வோடு கௌரவிப்பதும் மற்றும் உறுப்பு தானம் செய்ய தாராள மனதோடு முன்வருமாறு அதிக நபர்களை ஊக்குவிப்பதுமே இந்த முன்னெடுப்பை நடத்தியதற்கான குறிக்கோளாகும்.

ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் டாக்டர். இளங்குமரன் கலியமூர்த்தி மற்றும் உறுப்பு தானம் அளித்த நபர்களின் பெற்றோர்கள் இந்த சைக்ளோத்தான் நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சுய நலத்தை தியாகம் செய்து பொது நலன் கருதி செய்யப்படும் இந்த உன்னத செயலை பாராட்டும் வகையில் உறுப்பு தானம் அளித்த நபர்களின் பெற்றோர்கள், இந்நிகழ்வின்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். உறுப்பு தானம் அளித்த நபர்களுள் சிலர், மிக இள வயதினர். 12 வயதே நிரம்பிய சிறுவன் மற்றும் 21 வயதான ஒரு இளைஞன் ஆகியோர் உயிரிழந்த போதிலும் உறுப்பு தானத்தின் வழியாக தங்களது வாழ்நாளுக்குப் பிறகும் பலருக்கு வாழ்க்கை என்ற அரிய வெகுமதியை வழங்கிச் சென்றிருக்கின்றனர்.

சென்னையின் குரோம்பேட்டையில் ரேலா மருத்துவமனை வளாகத்திலிருந்து காலை 5.30 மணிக்கு ஆரம்பமான 110 கிலோமீட்டர் தூரத்திற்கான இந்த சைக்கிள் பயணத்தில் 500-க்கும் அதிகமான சைக்கிள் வீரர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். தாம்பரம், பெருங்களத்தூர், படப்பை, ஒரகடம், திருக்கச்சூர், பாலூர், பழையசீவாரம், எழிச்சூர், தெரசாபுரம், குளத்தூர், மணிமங்கலம் மற்றும் முடிச்சூர் வழியாக பயணித்த இந்த சைக்ளோத்தான் நிகழ்வு திரும்பவும் ரேலா மருத்துவமனை வளாகத்தில் வந்து சேர்ந்ததுடன் நிறைவடைந்தது. ஒரகடம் தொழிலக அமைவிடங்கள், பாலாறு ஆற்று கரையோரம் என நவீனமும், இயற்கையும் கலந்த பாதை வழியாக நடைபெற்ற இப்பயணத்தில் எளிய கிராமங்கள், உயரமான மலைகள் மற்றும் ஏரிகள் பின்புலத்தில் இருக்க அவற்றை பார்த்து இரசித்த வண்ணம் இந்த விழிப்புணர்வு வீரர்கள் ஆர்வம் குறையாது பங்கேற்றனர்.

ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் டாக்டர். இளங்குமரன் கலியமூர்த்தி இந்நிகழ்வில் பேசுகையில், “சைக்கிளிங் செய்வது மற்றும் உறுப்பு தானம் அளிப்பது என்ற இரண்டு விஷயங்களுக்கும் அடிப்படையான மதிப்பீடுகளாக இருப்பவை ஒற்றுமை, விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றம் இந்த மூன்று அம்சங்களின் ஒருங்கிணைந்த சாரத்தை இன்று நிகழும் ரேலா டெனாசிட்டி 110K சைக்ளோத்தான் நிகழ்வு உள்ளடக்கியதாக நடத்தப்படுகிறது. உடலுறுப்பு தானம் மற்றும் பலரது வாழ்க்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் பரப்புவது மீது எங்களது பொறுப்புணர்வை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. இந்நிகழ்வின் வழியாக, உயிர் தானம் என்ற கருணையின் உச்சகட்ட நடவடிக்கையை தாராள மனதோடு செய்த நபர்களின் நினைவைப் போற்றி அவர்களுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். இதன் மூலம் பிறரும் உறுப்பு தானம் அளிக்க உத்வேகம் பெற வேண்டும் என்பதே இதன் மற்றொரு நோக்கமாகும்,” என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: “உறுப்புமாற்று சிகிச்சைக்காக உறுப்புகளை தானமாகப் பெற நம் நாட்டில் நிலவும் மிகப்பெரிய தேவையை கருத்தில் கொள்ளும்போது, உறுப்பு தானம் செய்ய அதிக எண்ணிக்கையிலான நபர்கள் ஆர்வத்தோடு முன்வருவது முக்கியம். எமது மருத்துவமனையில் மட்டும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சைக்காக 193 நபர்களும் சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சைக்காக 114 நபர்களும் காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றனர். ஆனால், கடந்த ஆண்டில் ஒட்டுமொத்த தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் வெறும் 156 உறுப்பு தான நிகழ்வுகளே நடைபெற்றிருக்கின்றன.”

About Author