போலி அனுமதிகளை உடனடியாக தடுத்திட வேண்டுமென தமிழக முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிய
தங்களின் சீரிய தலைமையின் கீழ் தமிழகம் அனைத்து துறைகளிலும் நாளும் வளர்ச்சி பெற்று வருகிறது. குறிப்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து, எளிமைப்படுத்தி சீர்தூக்கி செம்மைப்படுத்தி வளர்ச்சியும் எழுச்சியும் பெற்றுள்ளது.
அதே சமயம் சிஎம்டிஏ எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் குறிப்பாக அனகாபுத்தூர், ஆவடி (மாநகராட்சி), பல்லாவரம், பம்மல், பூந்தமல்லி, செம்பாக்கம், தாம்பரம் (மாநகராட்சி) மற்றும் திருவேற்காடு ஆகிய 8 நகராட்சிகள், சித்தாலப்பாக்கம், குன்றத்தூர், மாடம்பாக்கம், மாங்காடு, மீனம்பாக்கம், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், திருமழிசை, திருநீர்மலை மற்றும் திருநின்றவூர் ஆகிய 12 பேரூராட்சிகள் மற்றும் காட்டாங்குளத்தூர், குன்றத்தூர், மீஞ்சூர், பூந்தமல்லி, புழல், சோழவரம், ஸ்ரீபெரும்புதூர், செந்தாமஸ் மவுண்ட் (பரங்கிமலை), திருவள்ளூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய 10 ஒன்றிய அலுவலகங்களில் மனைப் பிரிவு அனுமதி, மனை உட்பிரிவு அனுமதி, நிலம் மறுவகைப்பாடு மாற்றம், குடியிருப்பு மற்றும் வணிக கட்டட திட்ட அனுமதி உள்ளிட்ட அனுமதிகளை பெறுவதற்கு பொதுமக்கள் மற்றும் அபிவிருத்தியாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விண்ணப்பித்து பல ஆயிரம் கோப்புகள் இதுவரை தீர்வுகள் ஏற்படாமல் சிஎம்டிஏ நிர்வாகத்தின் சீர் கேட்டால் கிணற்றில் போடப்பட்ட கற்களை போன்று கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
காரணம் மேற்கண்ட பகுதிகளில் விண்ணப்பங்களை கூராய்வு செய்து அனுமதி வழங்குவதற்கு உரிய உதவி திட்ட வரைவாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் இங்கு பணிக்கு வருவதில்லை எனவும், பொதுமக்களின் தொடர் புகாரின் பேரில் சிஎம்டிஏ நிர்வாகத்தால் சுழற்சி முறையில் புதிய பணியாளர்களை பணியமர்த்தினாலும் அவர்கள் மருத்துவ விடுப்பில் சென்று விடுவதாகவும் தெரிகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆசியுடன் போலி அனுமதிகளை வழங்கும் அலுவலகங்கள் தாராளமாக செயல்படுவதாகவும் இவர்களை நம்பி போதிய விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் போலி அனுமதிகளை பெற்று பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து எங்கள் கூட்டமைப்பிற்கு புகார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக குன்றத்தூர், பரங்கிமலை, காட்டாங்குளத்தூர் மற்றும் திருப்போரூர் உள்ளிட்ட ஒன்றிய அலுவலகங்களில் நஞ்சை வகைபாடு உள்ள நிலங்களை, நில வகைபாடு மாற்றம் எதுவும் செய்யாமல் பெருந்தொகை பெற்றுக்கொண்டு ஓரிரு வாரங்களில் போலியான முறையில் மனை உட்பிரிவு அனுமதிகளை வழங்கும் வகையில் இந்த பகுதியில் போலியான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை 500 போலி மனை உட்பிரிவு அனுமதி திட்டங்கள் கண்டறியப்பட்டு இருக்கிறது. இன்னும் பல ஆயிரம் போலி திட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிகிறது. இதனால் சரியான முறையில் சிஎம்டிஏ நிர்வாகத்திடம் விதிகளுக்கு உட்பட்டு மனை உட்பிரிவு அனுமதி பெற்று வணிகத்தை மேற்கொள்ளும் அபிவிருத்தியாளர்களும் சார் பதிவாளர்களால் சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றனர். இதுகுறித்து டிடிசிபி இயக்குனர் மற்றும் சிஎம்டிஏ நிர்வாகத்தினருக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதனை தடுப்பதற்கான எந்த வித நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இதனால் மீண்டும் அங்கீகாரமற்ற மனைகளை போலியான வகையில் அனுமதி பெற்று பதிவு செய்யும் வழக்கம் தொடர்கிறது. இதனால் தங்களின் சீரிய தலைமையின் கீழ் சிறப்பாக நடைபெறும் ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இதனை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு இதுவரை வழங்கிய போலி அனுமதிகளை பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் வரன்முறைபடுத்தி சரி செய்து சீர்படுத்துவதற்கும், போலியான அனுமதிகளை வழங்கும் அலுவலகங்களை கண்டறிந்து இரும்பு கரம் கொண்டு அடக்கிடும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்தும், இனி இதுபோன்று போலியான முறையில் அனுமதிகள் வழங்குவதை தடுத்து நிறுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் தாங்கள் தகுந்த நடவடிக்கையை விரைந்து எடுத்து உதவிட வேண்டுமென போலி அனுமதிகளை உடனடியாக தடுத்திட வேண்டுமென தமிழக முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.