தமிழக முதல்வரின் பிறந்த நாளையொட்டி, சூளையிலுள்ள ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகள்!

சென்னை, சூளையைச் சேர்ந்த ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் (Adinath Jain Trust), இன்று (1 மார்ச் 2023) ஏழை – எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை நடத்தியது. மாண்புமிகு தமிழக முதல்வரின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இவ்விழாவில், சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள், 600 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு மாண்புமிகு தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர் பாபு தலைமை தாங்கி பயனாளிகளுக்கு செயற்கைக் கால், மூன்று சக்கர சைக்கிள், ஊன்று கோல், சக்கர நாற்காலி, கண்ணாடி, காது கேட்கும் கருவி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.
இதில் திரு. கங்காபிரசாத், திரு. அனூப்சந்த் பிராக்சா, திரு. பிரமோத் சோப்ரா, டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன், டாக்டர் சுரேந்தர் குமார் போரா, திரு. பிரகாஷ் சந்த் குலேச்சா, திரு. மதன்லால் சௌவாட்டியா, வழக்கறிஞர் ஷர்னிக் ஜெயின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆதிநாத் ஜெயின் டிரஸ்டின் நிர்வாகி திரு. மனோஜ் ஜெயின், “திருமதி கஸ்தூரிபாய் கவாத் நினைவாக அவரது குடும்பத்தினர் திருமதி ஆஷிபாய் ரானுலால், திரு. தேவ்ராஜ் குலேச்சா ஆகியோரது ஆதரவோடு இந்த உபகரணங்கள் ஏழை – எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த 43 ஆண்டுகளாக ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் சார்பில் 12 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு இது போன்ற இலவச சேவைகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.
இன்றைய நிகழ்வின் மூலம் மேலும் 600 பேரின் வாழ்க்கையை எளிமையாக்கியுள்ளோம். இத்தகைய உபகரணங்கள் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், சமூகத்தில் அவர்களின் நம்பிக்கையும், சமூக நிலையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மேலும் அவர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்து இருக்கும் நிலை மாறும். அவர்களுக்கான சரியான வேலை வாய்ப்புகளைத் தேட இது உதவுவதோடு அவர்களின் எதிர்காலத்தை நம்பிக்கைக்குரியதாகவும் ஆக்கும்” என்று தெரிவித்தார்.