சென்னையில்உள்ளமுதியோர்களுக்கு உதவும் ‘சமர்பன்’ மையம்: ஆர்எம்டி குரூப் ஆப் ஹாஸ்பிடல்ஸ் அன்ட் கேர் துவக்கியது
சென்னை, ஆக.15– சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சோல்புல் இன்னோவேட்டிவ் கேர் குழுமத்தின் ஒரு அங்கமான நோயாளிகளுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்கி வரும் ஆர்எம்டி குரூப் ஆப் ஹாஸ்பிடல்ஸ் அன்ட் கேர் ‘சமர்பன்’ என்னும் மையத்தை சென்னையில் துவக்கியது. சென்னை, அசோக் நகரில் இந்த புதிய மையத்தை ஆர்எம்டி குரூப் ஆப் ஹாஸ்பிடல்ஸ் அன்ட் கேர் நிறுவனர் டாக்டர் ரிபப்ளிக்கா ஸ்ரீதர் முன்னிலையில் ராஜன் ஐ கேர் ஹாஸ்பிடல்ஸ் தலைவரும், மருத்துவ இயக்குனருமான டாக்டர் மோகன் ராஜன், நல்லி சில்க்ஸ் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
சமர்பன் மையத்தின் முக்கிய நோக்கம், இப்பகுதியில் உள்ள முதியோர்களின் தேவைகளில் பெரும்பான்மையானவற்றை பூர்த்தி செய்வதாகும். வேகமான நகரமயமாக்கல் காரணமாக வயதானவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அதில் பலர் தனிமையில் இருப்பதோடு அவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் கிடைப்பதில்லை. அவர்கள் மருத்துவ ஆலோசனை அல்லது ரத்தப் பரிசோதனை மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக நீண்ட தூரம் செல்வது என்பது அவர்களுக்கு ஒரு பெரும் சவாலாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அவற்றை போக்கும் வகையில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் மன நிம்மதிக்காக கேரம்போர்டு மற்றும் செஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாட விரும்புவதோடு, நூலகங்களுக்கு சென்று ஓய்வு நேரங்களில் படிக்க விருப்பப்படுவார்கள். அத்துடன் உடற்பயிற்சி செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் அவர்களுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.
இவை அனைத்தையும் சமர்பன் ஒருங்கே கொண்டுள்ளது. இங்கு வீடுகள் அல்லது முதியோர் இல்லங்களுக்கு நேரடியாக சென்று ரத்த பரிசோதனை செய்வது முதல், வீட்டிற்கே சென்று மருத்துவ சேவைகளை வழங்குதல், முதியோர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுதல், அவர்களுக்கு தேவையான சரியான உணவுகளை வழங்குதல், குறைந்த நாட்கள் தங்கும் வசதிகள், நீண்ட நாட்கள் தங்கும் வசதிகள், நியூரோ அல்லது ஆர்த்தோ சிகிச்சை முறைகள், பிசியோதெரபி, ஆரோக்கியமாக இருப்பதற்கான யோகா, விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன.
இது குறித்து ஆர்எம்டி குரூப் ஆப் ஹாஸ்பிடல்ஸ் அன்ட் கேர் நிறுவனர் டாக்டர் ரிபப்ளிக்கா ஸ்ரீதர் கூறுகையில், மூத்த குடிமக்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு உறுதி அளிக்கும் வகையில் இந்த சமர்பன் மையம் திறக்கப்பட்டுள்ளது. முதியோர் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் சமர்பன் அவர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கத் தயாராக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் மருத்துவமனை 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்திருப்பதன் காரணத்தால் இந்த மையத்தின் மூலம் முதியோர்களுக்கு சிறப்பான சேவைகளை எங்களால் வழங்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.