ரேலா மருத்துவமனை, அபினவ் பிந்த்ரா ஃபவுண்டேஷன் மற்றும் SOAR டிரஸ்ட் உடன் இணைந்து விளையாட்டு வீரர்களுக்கு இலவச சிகிச்சை வழங்க புதிய திட்டம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 27, 2024: தமிழ்நாடு மாநிலத்தில் விளையாட்டு வீரர்களை ஆதரிக்கிற மற்றும் ஒரு முதன்மை வாழ்க்கைப் பணியாக விளையாட்டை தேர்வு செய்து மேற்கொள்ள இளம் தலைமுறையினருக்கு உத்வேகமளிக்கும் ஒரு நல்ல முயற்சியாக பல்வேறு புதிய முன்னெடுப்பு திட்டங்களை, ரேலா மருத்துவமனை இன்று அறிவித்திருக்கிறது. விளையாட்டின்போது ஏற்படும் காயங்களுக்கு இலவசமாக உட்பதிய சாதனங்களை வழங்குவதற்கு அபினவ் பிந்த்ரா ஃபவுண்டேஷன் உடன் ஒரு கூட்டுவகிப்பு நடவடிக்கையும் மற்றும் எலும்பியல், முதுகுத்தண்டு மற்றும் விளையாட்டு காயங்களுக்கான சிகிச்சைக்கு நிதி வழங்க ஸ்பைன் & ஆர்த்தோபெடிக்ஸ் ஆக்ஷன் அண்ட் ரீசர்ச் டிரஸ்ட் (SOAR) நடவடிக்கை மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்புடன் ஒரு ஒத்துழைப்பு செயல்பாடும், இந்த முன்னெடுப்பு நடவடிக்கைகளுள் உள்ளடங்கும்.
விளையாட்டு காயங்கள் தொடர்பான அறுவைசிகிச்சைகளுக்கு பதியவைப்பு சாதனங்களை அபினவ் பிந்த்ரா ஃபவுண்டேஷன் இலவசமாக வழங்கும். ரேலா மருத்துவமனையில் நடைபெறும் விளையாட்டு வீரர்களுக்கான அறுவைசிகிச்சை மற்றும் சிகிச்சைகளுக்கான செலவை SOAR டிரஸ்ட் ஏற்றுக்கொள்ளும். இளம் விளையாட்டு வீரர்களுக்கும் மற்றும் விளையாட்டு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கும் அதிகம் பயனளிப்பதாக இச்சேவைகள் இருக்கும். சிகிச்சைக்கான தேவை எழும்போது பள்ளி, கல்லூரி அல்லது ஸ்போர்ட்ஸ் அகாடமி உட்பட அவர்களது கல்வி நிறுவனத்திலிருந்து ஒரு சான்றிதழை சமர்ப்பிப்பதன் வழியாக இச்சேவைகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
புதிய விளையாட்டு சேவை திட்டங்கள் அறிமுக நிகழ்வையொட்டி “தமிழ்நாட்டின் ஒலிம்பிக் வீரர்களை கொண்டாடி மகிழ்வது” என்ற ஒரு நிகழ்வை ரேலா மருத்துவமனை ஏற்பாடு செய்து நடத்தியது. இந்நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான ஒலிம்பிக் ஹாக்கி குழுவில் இடம் பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. வாசுதேவன் பாஸ்கரன், திரு. முகமது ரியாஸ், திரு. ஆடம் சின்க்ளேர் ஆகியோருடன் மிஸ். ஷைனி வில்சன் (800 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சேம்பியன்) மற்றும் மிஸ். ஆர்த்தி கஸ்தூரி (இந்திய ஸ்கேட்டிங் தடகள வீராங்கனை) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய குழுவில் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெற்றிருக்கிற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தங்களது வாழ்த்துகளை புகழ்பெற்ற இந்த விளையாட்டு வீரர்கள் தெரிவித்துக் கொண்டனர். 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸ்-ல் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் கடைசியாக வென்ற இந்திய தங்கப்பதக்கத்தை முதன் முறையாக பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தியது இந்நிகழ்ச்சியின் ஒரு முக்கிய அம்சமாகும். தமிழ்நாடெங்கிலும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களோடு அனுபவமிக்க இந்த விளையாட்டு வீரர்கள் அவர்களது கண்ணோட்டங்களை பகிர்ந்து கொண்டு ஆலோசனை குறிப்புகளையும், ஊக்குவிப்பையும் வழங்கினர்.