மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி திரு, ஆர். மகாதேவன் கண் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்கும் ஐஐஆர்எஸ்ஐ 2024 மாநாட்டை துவக்கி வைத்தார்

சென்னை, ஜூலை : மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி திரு, ஆர். மகாதேவன் கண் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்கும் ஐஐஆர்எஸ்ஐ 2024 மாநாட்டைத் துவக்கி வைத்தார். இதில் பல்வேறு நாடுகளிலிருந்து 4000க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்திய இன்ட்ராகுலர் இம்ப்ளான்ட் மற்றும் ரிப்ராக்டிவ் சொசைட்டி (ஐஐஆர்எஸ்ஐ) சார்பில் நடத்தப்படும் இந்திய இன்ட்ராகுலர் இம்ப்ளான்ட் மற்றும் ரிப்ராக்டிவ் மாநாடு இன்று தொடங்கியது.

மேலும் கண்களில் லென்ஸ் உள்வைப்பு (IOL) மற்றும் லேசிக் & ஒளிவிலகல் அறுவை சிகிச்சை ( LASIK & refractive surgery ) ஆகிய துறைகளை சார்ந்த 50 மருத்துவ நிபுணர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

ஐஐஆர்எஸ்ஐ தலைவர் டாக்டர் ஜகத் ராம், பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் அமர் அகர்வால் ஆகியோர் இத்தொடக்கவிழா நிகழ்வில் முன்னிலையில் வகித்தனர். நாடு முழுவதும் உள்ள கண் மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் கண் பராமரிப்பு மற்றும் அறுவை சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்களை மேம்படுத்துவது இந்த மாநாட்டின் நோக்கமாக விளங்குகிறது.

அதுமட்டுமின்றி, இந்த மாநாட்டில் கண் மருத்துவ பிரீமியர் லீக், ஐஐஆர்எஸ்ஐ திரைப்பட விழா விருதுகள் (IFFA), ஐஐஆர்எஸ்ஐ நிழற்படப் போட்டி, கருத்தரங்கு, இளம் கண் மருத்துவர்களுக்கான அமர்வுகள் எனப் பல நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மேலும் கண் மருத்துவப் பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கான வர்த்தகப் பகுதியும் இந்த மாநாட்டில் இடம்பெற்றுள்ளது.

இம்மாநாட்டில் உரையாற்றிய நீதிபதி ஆர். மகாதேவன் கூறியதாவது: பார்வை திறனை முறையாகப் பராமரிக்க வில்லை என்றால் அது ஒருவரது வாழ்க்கைத் தரம், உற்பத்தித்திறன் மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள், வேலை மற்றும் பொழுதுபோக்கிற்காக டிஜிட்டல் கேஜெட்களை அதிகமாகப் பயன்படுத்துவது போன்ற காரணங்களாலும் பார்வை ஆரோக்கியத்தைப் பற்றியும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணங்களாலும் ஒளிவிலகள் பிழைகள் உட்பட, பல்வேறு கண் சுகாதார பிரச்சினைகள் மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசு மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அதிகமாக பயன்படுத்துகின்ற வாழ்க்கைமுறை மாற்றங்களும் பிரச்சனையை மேலும் பெரிதாக்குகின்றன. இருப்பினும், கண் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் பெரும் முன்னேற்றம் அடைந்து வருவதும், கண் மருத்துவத்தில் நிபுணர்கள் உருவாகி வருவது மனநிறைவை அளிக்கிறது. தொழில்நுட்பம் மற்றும் மனித நிபுணத்துவ தத்தின் சக்தியைப் பயன்படுத்தி, எட்டாதவர்களைச் சென்றடைவதே காலத்தின் தேவை. அதனால்தான் கண் மருத்துவத்தில் பல்வேறு துணைப் பிரிவுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் சந்தித்து முன்னேற்றங்களை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். இந்தச் சூழலில், பார்வை ஆரோக்கியத்திற்கான பயனுள்ள தீர்வுகளை ஊக்குவிப்பதற்காக நடைபெறும் இம்மாநாட்டில் கண் நிபுணர்கள் பெருமளவில் பங்கேற்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

பின்னர் ஐஐஆர்எஸ்ஐயின் பொதுச் செயலாளரும், டாக்டர் அகர்வால்ஸ் குழுமக் கண் மருத்துவமனைகளின் தலைவருமான பேராசிரியர் அமர் அகர்வால் பேசியதாவது: “இந்த வருடாந்திர மாநாடு ஆண்டுக்கு ஆண்டு அளவு மற்றும் முக்கியத்துவத்தில் தொடர்ந்து வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்திய மற்றும் வெளிநாடு கண்மருத்துவர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்த இந்த மாநாடு மிகவும் உதவியாக இருக்கிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி அறுவை சிகிச்சை அமர்வுகள் ஒளிபரப்பு உள்ளன, இது பங்கேற்பாளர்கள் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சையில் புதிய நுட்பங்களைக் கற்றுக் கொள்வதை உறுதி செய்யும். அதுமட்டுமின்றி, வெட்லேப் படிப்புகளில் பல முக்கிய துறைகளில் அனுபவத்தைப் பெற முடியும், அது அவர்களை நம்பிக்கையுடன் பயிற்சி செய்ய உதவியாக இருப்பதுடன் நிபுணர்களுடன் அவர்கள் உரையாடுவதால் அவர்கள் சந்தேகங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.”

மாநாட்டின் தொடக்கவிழா அமர்வின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச்செய்தி வாசிக்கப்பட்டது. இம்மாநாட்டுக்கும் மற்றும் ஐஐஆர்எஸ் – ன் எதிர்கால முயற்சிகளுக்கும் ஆதரவை அதில் தெரிவித்திருந்த அவர், முன்னணி கண் மருத்துவ மையங்களுக்காக புகழ்பெற்றிருக்கும் சென்னை மாநகரம், தேசிய அளவிலான இம்மாநாட்டை நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது என்று அதில் தெரிவித்திருந்தார். “சிறப்பான பேருரைகள், நேரடியாக நடத்தப்படும் அறுவைசிகிச்சை செய்முறை விளக்கங்கள், வெட்லேப்ஸ் மீது நேரடி பயிற்சி, ஆப்தால்மிக் ப்ரீமியர் லீக், ஐஐஆர்எஸ்ஐ திரைப்பட திருவிழா விருதுகள் மற்றும் நிழற்பட போட்டி என இம்மாநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள், இம்மாநாட்டில் விவாதிக்கப்படுபவற்றின் ஆழத்தையும் மற்றும் பகிர்ந்து கொள்ளப்படும் நிபுணத்துவத்தையும் பிரதிபலிக்கின்றன,” என்று குறிப்பிட்ட அவர், இம்மாநாட்டின் வெற்றிக்காக தனது வாழ்த்தையும் தெரிவித்திருந்தார்.

மேலும் ஐஐஆர்எஸ்ஐ மாநாட்டில், கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை, கண் சிகிச்சை முன்னேற்றங்கள், குழந்தைகள் கண் மருத்துவம், ஓகுலோபிளாஸ்டி மற்றும் குளுக்கோமா போன்ற 40க்கும் மேற்பட்ட தலைப்புகளில் அறிவியல் அமர்வுகள் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் இந்திய மற்றும் உலக அளவிலான கண் மருத்துவர்களுக்கு அவர்களின் மருத்துவ பங்களிப்பாக விருதுகள் வழங்கப்படுகிறது.

சர்வதேச அளவில் ஜே. அகர்வால் குளோபல் ஐகான் தங்கப் பதக்கத்தை அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் நிக்கோல் ஆர் ஃப்ரேம் பெற்றார். மேலும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த டாக்டர். ஆண்ட்ரெஸ் பெனாட்டி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாக்டர். டேவிட் கன், அமெரிக்காவை சேர்ந்த டாக்டர். கிறிஸ்டோபர் எஸ் சேல்ஸ், டாக்டர். திவ்யா ஸ்ரீகுமரன், டாக்டர் ஜெஃப் ஹேல் பெட்டி, டாக்டர் லாரா டி பெனிட்டோ லோபிஸ், டாக்டர் லிசா கே, டாக்டர் மோர்கன் மைக்கேலெட்டி, டாக்டர் நவீன் கே ராவ், டாக்டர் சுமித்ரா கண்டேல்வால், டாக்டர் யாசின் டவுட், டாக்டர் யுனா ராபோபோர்ட், பிரேசிலை சேர்ந்த டாக்டர். துர்வல் எம். கார்வால்ஹோ ஜூனியர், கனடாவை சார்ந்த டாக்டர். ஐகே அகமது, இங்கிலாந்தை சேர்ந்த டாக்டர் ராதிகா ராம்பட், லெபனானை சேர்ந்த டாக்டர் ஷாடி அவ்வாட், பிரேசிலை சேர்ந்த டாக்டர் டிசியானா டி பிரான்செஸ்கோ ஆகியோர் விருதுகளை பெறுகின்றனர்.

மேலும் இந்திய அளவில் ஐஐஆர்எஸ்ஐ தலைவர் தங்கப் பதக்கத்தை டாக்டர். சதான்ஷு மாத்தூர் பெற்றார். அதேபோல டாக்டர் தல்ஜித் சிங் தங்கப் பதக்கம் டாக்டர் ரோஹித் ஓம் பிரகாஷ்,
அகர்வால் தங்கப் பதக்கம் டாக்டர் பிரேமா பத்மநாபன், ஓம் பிரகாஷ் தங்கப் பதக்கம் டாக்டர் ராஜேஷ் ஃபோக்லா, சுபோத் அகர்வால் தங்கப் பதக்கம் டாக்டர் சந்தோஷ் ஹோனவர் ஆகியோர் பெற்றனர். அதுமட்டுமின்றி, ஹரியானாவைச் சேர்ந்த டாக்டர் இந்தர் மோகன் ருஸ்டோகி, ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரிஷி ஸ்வரூப் மற்றும் டெல்லியைச் சேர்ந்த டாக்டர் பிரபுல்லா கே மஹாரானா ஐஐஆர்எஸ்ஐ தங்கப் பதக்கத்தை பெற்றனர்.

இந்த மாநாட்டில் சிறப்பு நிகழ்வாகக் கண் மருத்துவப் புகைப்படப் போட்டி மற்றும் விருதுகள் வழங்கப்படுகிறது

About Author