இஸ்லாமிய வெறுப்பை பரப்பும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எஸ்.டி.பி.ஐ தலைவர் முபாரக்

f8a32dab-c089-4198-8074-7e7ab46cf41c

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், மாநில பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், மாநில செயலாளர்கள் ரத்தினம், ஏ.கே.கரீம், வர்த்தகர் அணி மாநில தலைவர் கிண்டி அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் பஷீர் சுல்தான், முகமது ரஷீத், மண்டல செயலாளர் இஸ்மாயில் மற்றும் சென்னை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட தலைவர்கள் ஜூனைத் அன்சாரி, புஷ்பராஜ், சீனி முகமது மற்றும் எஸ்.வி.ராஜா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்ததாவது;

இஸ்லாமிய வெறுப்பை பரப்பும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்:

இந்தியாவில் வாழக்கூடிய சிறுபான்மை முஸ்லிம் சமூகம் ஒரு மிகப்பெரிய வாழ்வியல் நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், காஷ்மீர் ஃபைல்ஸ், புர்கா, கேரளா ஸ்டோரி என தொடர்ந்து முஸ்லிம் சமூகம் தொடர்பான பொய்யையும், அவதூறையும் கலந்து திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

முஸ்லிம்களின் கலாச்சாரம், பண்பாடுகள் குறித்த தவறான பார்வையை வேண்டுமென்றே வெளியிடுவது, பொது சமூகத்திடம் அச்சத்தை விதைப்பது போன்றவை இதுபோன்ற திரைப்படங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற திரைப்படங்கள் சங்பரிவார்கள் முன்னெடுக்கும் வெறுப்பு பிரச்சாரத்துக்கு வலுசேர்க்கவே திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சமூகங்களுக்கிடையே வன்மத்தை, மதமோதலை உருவாகவும், அமைதியை சீர்குலைக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறுபான்மை முஸ்லிம் சமூகம் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகள் ஏராளமாக உள்ளபோதும், அதுபற்றி பேசாமல் அவதூறை பரப்பி, அமைதியை சீர்குலைக்கும் இதுபோன்ற பொய்யான, அரசியல் நோக்கம் கொண்ட பரப்புரை படங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

எதிர்வரும் மே 5 அன்று வெளியாகும் கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரால் தமிழகத்தின் அமைதி சூழலை கெடுக்கும் திரைப்படங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இந்த திரைப்படம் வெளியிடப்பட்டால் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டங்களை நடத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூகநீதி அரசு ஜனநாயக நடைமுறையை காக்க வேண்டும்:

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழி செய்யும் சட்டத் திருத்தம், முத்திரைத்தாள் கட்டண உயா்வு சட்டத்திருத்தம், 100 ஏக்கருக்கும் அதிகமான தனியார் – அரசு திட்டங்களுக்கு நீர்நிலைகள், நீரோடைகள் ஆகியவற்றை தாரை வார்க்கும் சட்டத்திருத்தம் உள்ளிட்ட 17 சட்ட மசோதாக்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏப்ரல் 21 அன்று, தனது பெரும்பான்மை பலத்தால் கில்லட்டின்கள் முறையில் திமுக அரசு நிறைவேற்றயது. தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழி செய்யும் சட்ட மசோதாவுக்கு மிகப்பெரும் அளவில் எழுந்த எதிர்ப்பால் தமிழக அரசு அந்த மசோதாவை திரும்பப்பெற்றது. எதிர்ப்புக் குரல்களுக்கு மதிப்பளித்து மசோதவை வாபஸ் பெற்ற நடவடிக்கை வரவேற்க்கத்தக்கது. அதேவேளையில், திமுக அரசின் இந்த நடவடிக்கையானது ஆட்சியின் ஒரு சறுக்கலாவே அமைந்துவிட்டது.

பிரித்தானிய நாடாளுமன்ற நடைமுறைகளின்படி, விவாதமின்றி நிறைவேற்றப்படும் மசோதாக்களை ‘கில்லட்டின்’ மூலம் விவாதங்கள் கொல்லப்பட்டதாக கூறுவார்கள். அந்த வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரே நாளில் 17 சட்ட மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது என்பது ஜனநாயக அடிப்படைக்கு முற்றிலும் முரணானது.

கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளையும், எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், விவாதமின்றி சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது என்பது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறையாக இருக்க முடியாது. பெரும்பான்மை மமதையில் விவாதமின்றி மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்றி பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் பாஜகவைப் போன்று, சமூக நீதி பேசும் திமுக அரசும் ஜனநாயக முறையை கேலிக்கூத்தாக்குவது போன்று நடந்துகொள்வது வருத்தமளிக்கின்றது.

எந்த ஒரு மசோதாவாக இருந்தாலும் அது குறித்து விரிவான ஆழமான விவாதங்கள் நடைபெற வேண்டும். அதன் மீதான கலந்துரையாடல் மற்றும் ஒருமித்த கருத்து ஆகியவற்றை உருவாக்குதல் வேண்டும். அத்தகையதொரு ஜனநாயக நடைமுறைக்கு ஆளும் அரசு அனுமதிக்க வேண்டும். இத்தகைய ஜனநாயக முறையே ஆரோக்கியமானது.

ஆகவே, பெரும்பான்மை மமதையால் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் ஒன்றிய பாஜக அரசைப் போன்று செயல்படாமல் மக்களின் நம்பிக்கையை திமுக அரசு காக்க வேண்டும். தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழி செய்யும் மசோதாவை திரும்பப் பெற்றது போல், முத்திரைத்தாள் கட்டண உயா்வு சட்டத்திருத்தம், 100 ஏக்கருக்கும் அதிகமான தனியார் – அரசு திட்டங்களுக்கு நீர்நிலைகள், நீரோடைகள் ஆகியவற்றை தாரை வார்க்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டம் ஆகிய சட்ட மசோதாக்களையும் அரசு திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். என்றார்

About Author